தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி விவகாரங்கள் குறித்துப் பேச திமுக எம்.பி கனிமொழி, டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பில், காங்கிரஸின் சில தலைவர்கள் முன்வைத்து வரும் “ஆட்சியில் பங்கு” என்ற கோரிக்கையை திமுக ஏற்காது என்பதைத் திட்டவட்டமாக அவர் எடுத்துரைத்தார். தமிழக அரசியல் சூழலில் இதுவரை இல்லாத இந்த நடைமுறைக்கு இடமில்லை என்றும், தேவையற்ற குழப்பங்களை விளைவிக்கும் கருத்துகளைத் தவிர்க்குமாறு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்த வேண்டும் என்றும் கனிமொழி கேட்டுக்கொண்டார்.

​இந்த ஆலோசனையின் முடிவில், தொகுதிப் பங்கீடு தொடர்பான விரிவான பேச்சுவார்த்தைகள் பிப்ரவரி மாதம் காங்கிரஸ் அமைத்துள்ள கமிட்டியுடன் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆட்சியில் பங்கு இல்லை என்ற திமுகவின் நிலையை உணர்ந்துகொண்டு, தற்போதைய கருத்து வேறுபாடுகளைத் தள்ளிவைத்துவிட்டுத் தேர்தல் பணிகளில் ஒன்றிணைந்து செயல்பட ராகுல் காந்தியும் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் நிலவி வந்த சலசலப்புகளுக்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.