தமிழக அரசியலில் தவெக மற்றும் காங்கிரஸ் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட பாரம்பரியம் இருந்தாலும், தற்போது மற்ற கட்சிகளைச் சார்ந்தே இருப்பதால் தேய்ந்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.
விஜய் காங்கிரஸ் கட்சிக்குத் தேவையான ஊக்கத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தவெகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்தக் கருத்துக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை நாகரீகமாகப் பதிலடி கொடுத்துள்ளார். தங்களுக்கு ராகுல் காந்தியே மிகப்பெரிய ஊக்கமாக இருப்பதாகவும், தொண்டர்களுக்குப் பூஸ்ட், ஹார்லிக்ஸ் என எதையும் ராகுல் காந்தியே வழங்கிவிட்டதாகக் குறிப்பிட்டார்.
விஜய்யின் தரப்பிலிருந்து வந்த அழைப்பிற்கு நன்றி தெரிவித்த அவர், காங்கிரஸ் தற்போது மாவட்டத் தலைவர்களை நியமித்து தேர்தலுக்காக மிக விரைவாகச் செயல்பட்டு வருவதாகவும், தங்களுக்குப் பிறரிடமிருந்து ஊக்கம் தேவையில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
