மத்தியப் பிரதேச மாநிலத்தில் புகழ்பெற்ற ஆஷாபுரி மா பவானி கோவிலில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் துணிச்சலான கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

முகமூடி அணிந்த மூன்று கொள்ளையர்களில் ஒருவன் ஜன்னல் வழியாகக் கோவிலுக்குள் நுழைந்து, காலணிகளைக் கூட கழற்றாமல் அம்மன் சிலைக்கு வணக்கம் செலுத்திவிட்டு, அங்கிருந்த சுமார் 4 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ஒரு பெரிய வெள்ளிக்குடையைத் திருடிச் சென்றான்.
<a href="http://

“>
சுமார் 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த நகைகளைத் திருடுவதற்கு, எட்டாத உயரத்தில் இருந்த குடையை அந்த நபர் இரண்டு பெட்டிகளை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைத்து லாவகமாக எடுத்துச் சென்ற காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மோப்ப நாய் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சந்தேகத்தின் பேரில் இருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழமை வாய்ந்த இக்கோவிலில் அம்மனை வணங்கிவிட்டு திருடப்பட்ட விசித்திரமான இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.