பெங்களூரு மாரத்தஹள்ளி அருகே உள்ள யமலூரில் வசிக்கும் தொழிலதிபர் ஸ்ரீமந்த் ஜெயின் என்பவரது வீட்டில் சுமார் 18.45 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஜெயின் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்கச் சென்றிருந்தபோது இந்தத் துணிகரத் திருட்டு அரங்கேறியுள்ளது. வீட்டில் இருந்த சமையல்காரர் அம்பிகா என்பவர் மதியம் ஒரு மணி அளவில் ஜெயினைத் தொடர்பு கொண்டு வீட்டில் பணிபுரிந்த நேபாளத்தைச் சேர்ந்த தம்பதியினர் காணவில்லை என்று தகவல் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினர் உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் இருந்த பாதுகாப்புப் பெட்டகங்கள் உடைக்கப்பட்டு சுமார் 11.5 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 11.5 லட்சம் ரூபாய் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்தத் திருட்டு தொடர்பாகத் தினேஷ் மற்றும் அவரது மனைவி கமலா ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் இருவரும் வெறும் இருபது நாட்களுக்கு முன்புதான் இந்த வீட்டில் வேலைக்குச் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டமிட்டு இந்தத் திருட்டை அரங்கேற்றியுள்ள அந்தத் தம்பதியினர், கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாதவாறு மின் இணைப்பைத் துண்டித்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர். அவர்களைப் பிடிக்க மாரத்தஹள்ளி போலீசார் தனிப்படைகளை அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

வெளி மாநிலம் அல்லது வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை வேலைக்கு அமர்த்தும்போது முறையான போலீஸ் சரிபார்ப்பைச் செய்ய வேண்டும் என்றும், அவர்களின் அடையாள ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டியது அவசியம் என்றும் பெங்களூரு காவல்துறை பொதுமக்களுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.