சென்னை அடையாறில் சாக்குமூட்டையில் சடலம் மீட்கப்பட்ட வழக்கில், இப்போது வெளியாகியுள்ள தகவல்கள் நெஞ்சையே பதற வைக்கின்றன! பீகாரைச் சேர்ந்த கௌரவ் குமார் என்பவர் மட்டும் கொல்லப்படவில்லை, அவரது மனைவி மற்றும் 2 வயதுக் குழந்தையும் சேர்த்தே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு குடும்பமே அடியோடு அழிக்கப்பட்டிருக்கும் இந்தச் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கௌரவ் குமார் தரமணியில் உள்ள ஒரு கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜனவரி 26-ஆம் தேதி, அடையாறு இந்திரா நகரில் ரத்தம் வடிந்த நிலையில் ஒரு சாக்குமூட்டை கிடப்பதைக் கண்ட போலீசார், அதைத் திறந்து பார்த்தபோதுதான் கௌரவ் குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பைக்கில் வந்த இளைஞர்கள் அந்த மூட்டையை வீசிச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கௌரவ் குமாரின் நண்பர் உள்ளிட்ட 7 பேரைப் பிடித்து விசாரித்தபோதுதான், கௌரவ் குமாரின் மனைவி முனிதா குமாரி மற்றும் அவர்களது 2 வயதுக் குழந்தையையும் தாங்களே கொன்றதாக அவர்கள் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தற்போது 2 வயதுக் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், முனிதாவின் சடலத்தைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அடையாறு கால்வாய், கூவம் ஆற்றங்கரை மற்றும் பெருங்குடி குப்பை கிடங்கு எனப் பல இடங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஒரு சின்னச் சண்டையில் ஒரு குடும்பத்தையே இப்படிச் சிதைத்திருக்கும் சம்பவம் அந்தப் பகுதி மக்களை உறைய வைத்துள்ளது.
