பெங்களூரு பனசங்கரி பகுதியைச் சேர்ந்த குருபிரசாத் என்பவருக்கும் கீர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக கீர்த்தியின் பெற்றோர் சுமார் 35 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர்.
தொடக்கத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்த இந்த தம்பதியிடையே, குருபிரசாத் சொந்தமாக வீடு கட்டத் திட்டமிட்ட பிறகு விரிசல் ஏற்பட்டுள்ளது. வீடு கட்ட கூடுதல் பணம் தேவைப்பட்டதால், தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு குருபிரசாத் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.
மகளின் நிலையைக் கண்டு வருந்திய கீர்த்தியின் பெற்றோர், கடந்த டிசம்பர் மாதம் பலரிடம் கடன் வாங்கி 8 லட்சம் ரூபாயை குருபிரசாத்திடம் கொடுத்துள்ளனர். இருப்பினும், அந்தப் பணத்தால் திருப்தியடையாத குருபிரசாத், மீண்டும் கூடுதல் பணம் கேட்டு கீர்த்தியை அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கீர்த்தி, கடந்த 24-ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது மகளின் மரணத்திற்கு வரதட்சணைக் கொடுமையே காரணம் என்று கீர்த்தியின் பெற்றோர் பனசங்கரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
திருமணமான சில ஆண்டுகளிலேயே பெண் உயிரிழந்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், போலீசார் குருபிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தற்போது குருபிரசாத்தை போலீசார் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணைக் கொடுமைக்கு ஒரு இளம்பெண் பலியான இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
