புனே வாஹோலி பகுதியில் வசித்து வந்த சோனி என்ற பெண், மதுவுக்கு அடிமையான தனது கணவருடன் ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக, தனது 11 வயது மகனைக் கொன்று 13 வயது மகளையும் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோனியின் கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து சண்டையிடுவதால், வீட்டு உரிமையாளர் அவர்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தம்பதியினரிடையே செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கணவர் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, ஆத்திரமடைந்த சோனி தனது மகன் சாய்ராஜின் கழுத்தை அரிவாளால் அறுத்துக் கொலை செய்துள்ளார். மேலும் தனது மகளையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து வந்த லோனிகண்ட் போலீசார் சோனியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுப்பழக்கம் ஒரு குடும்பத்தையே சிதைத்த இந்தச் சம்பவம் புனேவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.