மத்தியப் பிரதேச மாநிலம் ததியா மாவட்டத்தில், கள்ளச்சாராயத்திற்கு எதிராகப் போலீசார் மற்றும் கலால்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

‘புல்ரா கஞ்சர் டெரா’ என்ற பகுதியில் போலீஸ் வாகனங்கள் வருவதைப் பார்த்ததும், அங்குச் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தவர்கள் தங்கள் வீடுகளை அப்படியே விட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.

அப்போது ஒரு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது. அங்குச் சென்று பார்த்த எஸ்டிஓபி (SDOP) ஆகாஞ்சா ஜெயின் என்ற பெண் அதிகாரி அதிர்ச்சியடைந்தார். வெறும் 3 மாதமே ஆன பச்சிளம் குழந்தையைக் கடும் குளிரில் தனியாக விட்டுவிட்டு அதன் பெற்றோர் தப்பிச் சென்றிருந்தனர்.

குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்ததும் அதிகாரி ஆகாஞ்சாவின் தாய்மை உணர்வு பொங்கியது. உடனடியாக குழந்தையைத் தனது கைகளில் ஏந்தியவர், அதற்குப் பால் மற்றும் கதகதப்பான ஆடைகளை வழங்கினார்.

பின்னர் அக்குழந்தையை அதன் அக்காவிடம் ஒப்படைத்த அவர், “சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது எங்கள் கடமை, ஆனால் ஒரு குழந்தையின் அழுகையைத் துடைப்பது எனது பொறுப்பு” எனக் கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்தச் சோதனையில் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 19 ஆயிரம் கிலோ கள்ளச்சாராய ஊறல்கள் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.