திண்டுக்கல்லில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த ‘தாலிக்குத் தங்கம்’ உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டது. தேர்தல் நெருங்குவதால் தற்போது முதல்வர் ஸ்டாலின் புதிய நாடகங்களை அரங்கேற்றி வருகிறார். பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கிவிட்டு, மறுபுறம் மின் கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்திவிட்டனர். டாஸ்மாக் மூலம் பணத்தைப் பறித்துக் கொள்கின்றனர்.

முன்பு 5 ஆயிரம் ரூபாயில் குடும்பம் நடத்தியவர்கள், இன்று 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த தேர்தலில் 1500 ரூபாய் தருவதாகக் கூறி ஏமாற்றியவர்கள், இப்போது தேர்தல் வருவதால் 1000 ரூபாயைக் கொடுத்து மக்களைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள். ஆனால், அதிமுக அறிவித்துள்ள 5 புதிய திட்டங்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்களைப் பிடித்தால், உடனடியாக அமைச்சர்களிடம் இருந்து போன் வருகிறது. காவல்துறையினரே கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாகச் செய்திகள் வருகின்றன. அதிமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு மிகுந்த மாநிலமாகத் திகழ்ந்தது. ஆனால் இன்று ஆளுங்கட்சி எம்பி கனிமொழி பங்கேற்ற கூட்டத்திலேயே பாதுகாப்பு இல்லை என்பதுதான் நிலைமை.

பாஜக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைந்தது குறித்துக் கேட்கிறீர்கள். அவர் ஏற்கனவே அங்குதான் இருந்தார், இப்போது மீண்டும் வந்துள்ளார். தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது, விரைவில் நல்ல செய்தி வரும். விஜய்யின் அரசியல் குறித்த கேள்விக்கு, “லாட்டரி வியாபாரி மார்ட்டினின் மருமகனைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, ஊழலை ஒழிப்பேன் என்று விஜய் பேசுவது சிரிப்பை வரவழைக்கிறது.

ஜெயலலிதா ஆட்சியில் கொள்ளையடித்த பணம் சசிகலா மற்றும் தினகரனிடம் இருப்பதாக ஒருகாலத்தில் இவர்கள் பேசியது உண்மைதான். ஆனால் இன்று அவர்கள் இணைந்துவிட்டதால் எல்லாம் முடிந்துவிட்டது போலப் பேசுகிறார்கள்,” எனத் தெரிவித்தார். மேலும் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டக் கோரிக்கையை நிறைவேற்றாமல், அவர்கள் சம்பளத்தில் இருந்தே 10 சதவீதத்தைப் பிடித்துக் கொண்டு ஓய்வூதியம் தருவதாகக் கூறுவது ஏமாற்று வேலை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.