2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.

திமுக அரசை வீழ்த்தும் நோக்கில் உருவான இந்தக் கூட்டணியில் பாமகவும் இணைந்திருப்பது கூட்டணியின் பலத்தை அதிகரித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியுடன் இணைய மாட்டேன் என்று கூறிவந்த டிடிவி தினகரன், தற்போது அதே கூட்டணியில் ஐக்கியமாகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

“யார் பேச்சையோ கேட்டு தர்மயுத்தம் நடத்தாமல் இருந்திருந்தால், ஓபிஎஸ் அவர்களே மீண்டும் முதலமைச்சராக நீடித்திருப்பார்” என்று குறிப்பிட்ட அவர், “நானே இந்தக் கூட்டணிக்கு வந்துவிட்டேன், நீங்கள் ஏன் இன்னும் யோசிக்கிறீர்கள்?” என ஓபிஎஸ்-ஸை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

தன்னை வாழவைத்த இயக்கத்திற்கு நன்றி கடன் செய்ய வேண்டிய நேரம் இது என்றும், பழைய மனக்கசப்புகளை மறந்து ஓபிஎஸ் உடனடியாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும் என்றும் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

ஓபிஎஸ் தரப்பில் சில தர்மசங்கடங்கள் இருந்தாலும், அனைத்தையும் கடந்து அவர் தங்களுக்கு ஆதரவாக வருவார் என எதிர்பார்ப்பதாக தினகரன் தெரிவித்துள்ளார்.