சென்னை வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த சத்யராஜ் என்பவர் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் செயலி (Dating App) மூலம் வெங்கடபிரசாத் என்ற கல்லூரி மாணவர் அறிமுகமாகியுள்ளார்.

இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடலாம் எனப் பேசி, சத்யராஜை துரைப்பாக்கம் பாண்டியன் நகர் பகுதிக்கு வெங்கடபிரசாத் வரவழைத்துள்ளார்.

அங்குள்ள ஒரு பொதுக் கழிப்பறைக்குச் சென்றபோது, அங்கு ஏற்கனவே மறைந்திருந்த வெங்கடபிரசாத்தின் நண்பர்களான விக்னேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் சத்யராஜை வழிமறித்துள்ளனர்.

திடீரென அந்த 3 பேரும் சேர்ந்து சத்யராஜை சரமாரியாகத் தாக்கி, அவர் அணிந்திருந்த தங்கக் கம்மலைப் பறித்துள்ளனர். அதுமட்டுமின்றி, கத்தியைக் காட்டி மிரட்டி அவரது மொபைல் போன் மூலம் ‘கூகுள் பே’ (Google Pay) வழியாக ₹6,300 பணத்தையும் வலுக்கட்டாயமாகத் தங்கள் கணக்கிற்கு மாற்றிக் கொண்டு தப்பினர்.

இதுகுறித்து சத்யராஜ் அளித்த புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட துரைப்பாக்கம் போலீசார், செல்போன் சிக்னல் மற்றும் வங்கிப் பரிவர்த்தனையை வைத்து கல்லூரி மாணவர் வெங்கடபிரசாத் உட்பட 3 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.