2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வங்கதேச அணி அதிரடியாக நீக்கப்பட்டு, அந்த இடத்தில் ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்தியாவில் விளையாட வங்கதேசம் மறுத்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் ஷாகித் அப்ரிடி கடுமையாகச் சாடியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்தியா பாகிஸ்தான் வர மறுத்தபோது, அந்த அணிக்கு வளைந்து கொடுத்து துபாயில் விளையாட அனுமதித்த ஐசிசி, வங்கதேசத்தின் கோரிக்கையை மட்டும் ஏன் ஏற்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐசிசி என்பது ஒரு சில செல்வாக்கு மிக்க நாடுகளுக்கு மட்டும் ஆதரவாகச் செயல்படாமல், அனைத்து நாடுகளையும் சமமாக நடத்த வேண்டும் என்று அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இந்த விவகாரத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் தனது போட்டிகளை இலங்கைக்கு மாற்றக் கோரிக்கை விடுத்திருந்தது.

ஆனால், ஐசிசி நடத்திய வாக்கெடுப்பில் 14 உறுப்பினர்கள் வங்கதேசத்தின் கோரிக்கைக்கு எதிராக வாக்களித்ததால், அந்த அணி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது. வங்கதேசத்திற்குப் பதிலாக குரூப் சி பிரிவில் ஸ்காட்லாந்து அணி இணைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் வங்கதேச ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

பிசிசிஐ-யின் செல்வாக்கிற்கு ஐசிசி அடிபணிந்து விட்டதாகவும், இது ஆசிய கிரிக்கெட்டிற்குள் ஏற்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய விரிசல் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர். வங்கதேசத்தின் இந்த வெளியேற்றம் நிதி ரீதியாகவும் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்குப் பல கோடி இழப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.