பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள கோபாலூர் பகுதியில் ஒருதலைக் காதலால் ஒரு இளம்பெண் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 17 ஆம் தேதி பள்ளி மாணவி ஒருவரை ஆதித்ய குமார் என்ற இளைஞர் வழிமறித்து அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
உடலில் தீப்பற்றிய நிலையில் அந்த மாணவி காப்பாற்றுங்கள் என்று அலறியபடி சுமார் 100 அடி தூரம் சாலை வழியே ஓடியுள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகத் தீயை அணைத்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பலத்த தீக்காயங்களுடன் கடந்த ஐந்து நாட்களாக உயிருக்குப் போராடி வந்த அந்த மாணவி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். காவல்துறை தன்னைத் தேடுவதை அறிந்த முக்கிய குற்றவாளியான ஆதித்ய குமார் பாட்னா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தடயவியல் நிபுணர்கள் அந்தப் பகுதியில் சோதனையிட்டு ஆதாரங்களைத் திரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி உயிரிழப்பதற்கு முன் அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தர ஸ்பீடி ட்ரையல் மூலம் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.
ஒருதலைக் காதலால் மாணவி உயிருடன் எரிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
