மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகேயுள்ள மஹூ பகுதியில் அரசு நடத்திய மக்கள் குறைதீர்க்கும் முகாமில், கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் ஆத்திரமடைந்த பழங்குடியின இளம் பெண் ஒருவர், அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்த எஸ்டிஎம் (SDM) உயர் அதிகாரியைப் பார்த்துப் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பி வறுத்தெடுத்த சம்பவம் ஒட்டுமொத்த அரசு அதிகாரிகளையும் சவகாசமாக உரைய வைத்துள்ளதுடன் சமூக வலைத்தளங்களிலும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

தனது கிராம மக்கள் கடந்த சில நாட்களாகக் குடிக்க ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் தவித்து வருவதாகவும், பெண்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வரும் அவலநிலை நீடிப்பதாகவும் கூறி, அப்பகுதி மக்களுடன் பதாகைகளை ஏந்தியபடி அந்தப் பெண் எஸ்டிஎம் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Samachar4u (@samachar4unetwork)

அப்போது அதிகாரியிடம் பேசிய அந்தப் பெண், “காகிதத்தில் மட்டும் எல்லாவற்றையும் சரியாகக் காட்டும் நிர்வாகம், தரையில் ஏன் எதையும் செய்வதில்லை? கடந்த மூன்று, நான்கு நாட்களாகக் கிராமத்திற்குத் தண்ணீரே வரவில்லை, நீங்கள் என்னதான் செய்கிறீர்கள்?” என்று ஆவேசமாக நியாயம் கேட்டுள்ளார்.

அந்தப் பெண்ணின் ஆக்ரோஷமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் எஸ்டிஎம் அதிகாரி திணறிப் போய் அமைதியாக நிற்க, அங்கிருந்த மற்ற அதிகாரிகள் அந்தப் பெண்ணைச் சமாதானம் செய்ய முயன்றனர். பலமுறை புகார் அளித்தும் கோடைக் காலத்தில் வயதானவர்களும் குழந்தைகளும் தண்ணீரின்றி அவதிப்படும் நிலைக்கு அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டும் வேளையில், அதிகாரியின் முகத்திற்கு நேராக நின்று தைரியமாகப் பேசிய அந்தப் பெண்ணின் வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து, அவரின் துணிச்சலைப் பாராட்டி அரசு நிர்வாகத்திற்கு எதிராகக் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.