சென்னையில் அதிகரித்து வரும் கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்த மழைநீர் வடிகால்களில் கொசுவலை கட்டப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ள நிலையில், இது குறித்து மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார்.

வடகிழக்குப் பருவமழைக்குப் பிறகு சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கொசுக்களின் ஆதிக்கம் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூக்கமின்றி தவிப்பதோடு, காய்ச்சல் உள்ளிட்ட நோய்ப் பாதிப்புகளுக்கும் உள்ளாகி வருகின்றனர். கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் தரப்பில் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், கொசுக்களை ஒழிக்க சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஒரு நூதன முயற்சியை மேற்கொண்டனர். திருவொற்றியூர், திரு.வி.க.நகர் உள்ளிட்ட மண்டலங்களில் உள்ள மழைநீர் வடிகால்வாய் தொட்டிகளின் மூடியைத் திறந்து, அதன் உட்பகுதியில் கொசுவலைகளைப் போர்த்தி மூடினர். வடிகாலுக்குள் உற்பத்தியாகும் கொசுக்கள், மூடியில் உள்ள துளைகள் வழியாக வெளியேறுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முன்னதாக வைகை அணையில் தெர்மாகோல் மிதக்கவிடப்பட்ட சம்பவத்துடன் ஒப்பிட்டுப் பல்வேறு கேலி வீடியோக்களும் பரவின.

இந்த நிலையில் அந்த பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த மேயர் பிரியாவிடம், இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதிலாவது:

“மழைநீர் வடிகாலில் கொசுவலை போர்த்தியது மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடையாது. ஒரு வார்டு கவுன்சிலர் கொடுத்த யோசனையின் அடிப்படையில், அவரது வேண்டுகோளுக்கு இணங்க அந்தப் பகுதியில் மட்டும் சோதனை முயற்சியாகச் செய்யப்பட்டது. இதனை இந்த அளவுக்கு சர்ச்சையாக்கும் வகையில் இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.” என்று மேயர் பிரியா தெரிவித்தார்.

மாநகராட்சியின் இந்த விளக்கம் ஒருபுறம் இருந்தாலும், சென்னையில் கொசுத் தொல்லையைக் குறைக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சென்னைவாசிகளின் கோரிக்கையாக உள்ளது.