சினிமாவில் வருவதைப் போன்ற இந்தத் துரோகச் சம்பவம் குவாலியர் மக்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குவாலியர் பகுதியில் புதர் மறைவில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது, அந்த இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவந்தது. ஒரு தோட்டா அவரது தலை வழியாகப் பாய்ந்து வெளியேறியிருந்தது, மற்றொரு தோட்டா உடலில் பதிந்திருந்தது.

போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், கொல்லப்பட்ட இளைஞரின் மனைவிக்கும் மற்றொரு நபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தங்களது காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை ஒழிக்கத் திட்டமிட்ட அந்தப் பெண், தனது கள்ளக்காதலனை ஏவி கணவனைத் துப்பாக்கியால் சுடச் சொல்லியுள்ளார்.

கள்ளக்காதலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கணவனை இரண்டு முறை சுட்டுக் கொன்றுவிட்டு, சடலத்தைப் புதருக்குள் வீசிவிட்டுத் தப்பியது விசாரணையில் உறுதியானது. தற்போது அந்தப் பெண் மற்றும் அவரது கள்ளக்காதலனைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.