நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 27-ம் தேதி வழங்க உள்ளது. தணிக்கை வாரியம் சான்றிதழ் அளிக்க மறுத்ததால் இப்படம் திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியாகவில்லை.
இதனை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தனி நீதிபதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நிலையில், தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு இந்த முக்கிய தீர்ப்பை அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற விசாரணையின் போது, தணிக்கை வாரியம் தரப்பில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று படக்குழு குற்றம்சாட்டியது. ஆனால், படத்தை மறுஆய்வு செய்வது குறித்து முன்பே தெரிவித்துவிட்டதாகவும், தணிக்கை நடைமுறைகளுக்குக் கால அவகாசம் தேவை என்றும் வாரியம் வாதாடியது.
இந்த வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். தீர்ப்பு படத்திற்குச் சாதகமாக வருமா அல்லது தணிக்கை வாரியத்தின் பிடி இறுகுமா என்பது அன்று தெரிந்துவிடும்.
