தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் இறங்கியுள்ள விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக களம் காண்கிறார். இந்த நிலையில், 2024-ல் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘கோட்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ தற்போது சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பி வருகிறது. இப்பாடல் வெளியானபோது கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், தற்போது விஜய்யின் தேர்தல் சின்னத்தோடு பொருந்திப்போவதால், வெங்கட் பிரபு அன்றே கணித்ததாகக் கூறி ரசிகர்கள் இதனை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

​சினிமா மற்றும் அரசியலில் ஒரே நேரத்தில் கவனம் ஈர்த்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபு, தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் முதற்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இப்படத்தின் பிரத்யேகத் தோற்றத்திற்காகச் சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பிய படக்குழு, அடுத்த ஒரு மாதத்திற்குள் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, அஜித் ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பான ‘மங்காத்தா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மங்காத்தா ஷூட்டிங் சமயத்தில் விஜய்-அஜித் இணைந்து எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்களை வெங்கட் பிரபு பகிர்ந்துள்ள நிலையில், ரீரிலீஸ் காட்சியிலும் மங்காத்தா வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.