தாம்பரத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியால் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நிலைதடுமாறிப் போன சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேச்சாக மாறியுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் மண்டல குழுக் கூட்டம் தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதிகளில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எச்.ராஜா, தான் 36 ஆண்டுகளாக கட்சியில் இருப்பதாகவும், கூட்டணி குறித்து ஒருபோதும் பேசியதில்லை என்றும் கறாராகத் தெரிவித்தார். மேலும், நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகாததற்கும் மத்திய அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும், தணிக்கை குழுவின் விதிகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே படம் வெளியாகும் என்றும் விளக்கமளித்தார்.
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், “நீங்கள் ஹீரோவாக நடித்த ‘கந்தன்மலை’ திரைப்படம் எப்போது வெளியாகும்?” என்று கேட்டார். எதிர்பாராத இந்தக் கேள்வியால் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போன எச்.ராஜா, பின்னர் சுதாரித்துக் கொண்டு, “படம் ஏற்கனவே வெளியாகிவிட்டது சார், யூடியூப்பில் ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்துவிட்டது” எனப் பதிலளித்தார். வீரக்குமார் இயக்கத்தில் உருவான இப்படம், திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால் ‘தாமரை’ எனும் யூடியூப் சேனலில் வெளியானது குறிப்பிடத்தக்கது. திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை, நாடகக் காதல் போன்ற உணர்ச்சிகரமான விஷயங்களைப் பேசிய இத்திரைப்படம், தற்போது எச்.ராஜாவை நெட்டிசன்களின் ‘ட்ரோல்’ மெட்டீரியலாக மாற்றியுள்ளது
