மால்டா நாட்டில் உணவு விநியோக ஊழியராகப் பணியாற்றி வரும் இந்திய இளைஞர் ஒருவரின் ஒரு மாத வாடகையை, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இணையதளப் பக்க வடிவமைப்பாளர் வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
மால்டாவில் பார்ட்மேன் என்ற பெயரில் காணொளிகளைப் பதிவிடும் இளைஞர், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அந்த இந்திய ஊழியரிடம் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் மூன்று ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வருவதையும் மாத வாடகையாக 200 யூரோ செலுத்துவதையும் அறிந்துகொண்டார்.
கடினமாக உழைக்கும் அந்த ஊழியரை மகிழ்ச்சிப்படுத்த விரும்பிய ஜெர்மனி இளைஞர், எதிர்பாராத விதமாக அவரது ஒரு மாத வாடகையான 200 யூரோவை ரொக்கமாக வழங்கினார். இச்சம்பவத்தால் நெகிழ்ந்து போன இந்திய ஊழியர் கண்ணீர் மல்க அவருக்கு நன்றி தெரிவித்ததுடன், இருவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த மனிதநேயமிக்க காணொளி சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதுடன், உலகெங்கிலும் உள்ள இணையவாசிகள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
