துபாயில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில், ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரகுமான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி புதிய வரலாறு படைத்தார். முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், அதல் (53) மற்றும் ரசூலி (68) ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 190 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய விண்டீஸ் அணி, முஜிபுரின் சுழற்பந்து வீச்சில் நிலைகுலைந்தது.
போட்டியின் திருப்புமுனையாக எவின் லூயிஸ், ஜான்சன் சார்லஸ் மற்றும் பிராண்டன் கிங் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி முஜிபுர் ஹாட்ரிக் சாதனை படைக்க, விண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன் மூலம் 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. டி20 அரங்கில் ரஷித் கான் மற்றும் கரீம் ஜனத்தை தொடர்ந்து ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3-வது ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை முஜிபுர் ரகுமான் பெற்றுள்ளார்.
