உத்தரப்பிரதேச மாநிலம் ஜாலான் ரயில் நிலையத்தில், பயணி ஒருவர் எவ்வித அச்சமும் இன்றி மிகவும் சாதாரணமாக ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அதே தண்டவாளத்தில் ரயில் மிக வேகமாக நெருங்கி வருவதை அவர் கவனிக்கவில்லை. மரணம் மிக அருகில் வந்துவிட்டதை உணராமல் அவர் மெதுவாகக் கடக்க முயன்ற அந்தத் திக் திக் தருணத்தில், அங்கிருந்த ஆர்பிஎஃப் வீரர் மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்தார். தண்டவாளத்தில் இருந்த பயணியை அப்படியே பிடித்து இழுத்து பிளாட்பாரத்திற்குள் தள்ளினார்.

​அவர் பயணியை இழுத்துத் தள்ளிய அதே நொடியில், ரயில் அந்த இடத்தைக் கடந்து சென்றது. “தண்டவாளத்தைக் கடக்கக் கூடாது” என்று எவ்வளவு எச்சரித்தாலும், அதை மதிக்காமல் உயிருக்கு ஆபத்தான முறையில் செயல்பட்ட அந்தப் பயணியைப் பார்த்த நெட்டிசன்கள் ஒரு பக்கம் கோபமடைந்தாலும், அந்த ஆர்பிஎஃப் வீரரின் வீரத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. தன் உயிரைப் பணையம் வைத்து அந்தப் பயணியைக் காப்பாற்றிய அந்த வீரர்தான் இப்போதைய இணையதள ஹீரோ! “விதி வலியதுன்னு சொல்லுவாங்க.. ஆனா இங்க ஆர்பிஎஃப் வீரரின் வேகம் விதியையே ஜெயிச்சிருச்சு” என்று இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.