திருச்சி மாநகரின் முக்கிய சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த மோதல் சம்பவம், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் இன்று காலை ஒரு பதற்றமான சூழல் நிலவியது. அங்கு பள்ளி சீருடை அணிந்த 12-ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை, 17 வயது மதிக்கத்தக்க மற்றொரு சிறுவன் கத்தியைக் காட்டி மிரட்டித் துரத்தியுள்ளான்.

இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். சிலர் இந்தச் சம்பவத்தைத் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர, அது காட்டுத்தீயாகப் பரவியது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கத்தியைக் காட்டிய சிறுவனும் பாதிக்கப்பட்ட மாணவனும் நண்பர்கள் என்பது தெரியவந்தது.

கடந்த சில மாதங்களாகவே இவர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகப் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், இன்று மீண்டும் தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த அந்த சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவனை மிரட்டியது அம்பலமாகியுள்ளது.