திருப்போரூர் தொகுதி விசிக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி மீது தனியார் ஹெலிகாப்டர் நிறுவன அதிகாரி சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த கோவளம் பகுதியில் ‘ஏரோ டான்’ (Aero Don) என்ற தனியார் நிறுவனம் சுற்றுலா ஹெலிகாப்டர் சேவையைத் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி தலையிடுவதாகவும், அதிகாரிகளிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக, ஏரோ டான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) நிசா, சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் மு.அப்பாவுவை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி தரப்பிலிருந்து தங்களுக்குக் கொடுக்கப்படும் நெருக்கடிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.

சபாநாயகரிடம் அளித்த மனுவில், மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு தொழிலதிபரையும், தனியார் நிறுவனத்தையும் மிரட்டும் வகையில் செயல்படும் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

தொழில் முதலீடுகளை ஈர்க்கத் தமிழக அரசு தீவிரம் காட்டி வரும் வேளையில், ஆளுங்கூட்டணி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மீது இத்தகைய புகார் எழுந்துள்ளதால், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.