கேரள முதல்வர் பினராயி விஜயன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தால் மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் ஆத்வாலே தெரிவித்துள்ள கருத்து, பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.

மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் ஆத்வாலே செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: “கேரள முதல்வர் பினராயி விஜயன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்தால் அது ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாக இருக்கும். அவ்வாறு இணையும் பட்சத்தில், கேரளாவுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது உறுதி செய்யப்படும். பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்குப் மிகப்பெரிய சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை அறிவிப்பார். அதனை மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.

கூட்டணியில் இணைந்தால் மட்டுமே நிதி கிடைக்கும் என்று  மத்திய அமைச்சர் பேசியது, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது எனப் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. மத்திய அமைச்சரின் இந்தப் பேச்சைக் கடுமையாக விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் கூறியுள்ளதாவது: மத்திய அமைச்சரின் இந்தப் பேச்சு ஜனநாயகத்திற்கு விரோதமானது மட்டுமல்லாமல், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் முரணானது.

இது இந்தியக் கூட்டாட்சி அமைப்பின் மீது நடத்தப்படும் நேரடித் தாக்குதலாகும். அனைத்து அரசியலமைப்பு நிறுவனங்களையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் காலடியில் கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது. மேலும் அரசியல் ரீதியாக முரண்படும் மாநில அரசுகளை நிதி ஒதுக்கீடு ரீதியாக மிரட்டுவைத்து  மத்திய அமைச்சரின் பேச்சு அமைந்துள்ளதாக இடதுசாரி முன்னணியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.