மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில் நடைபெற்ற ஆண்டுத் திருவிழாவில், உயரே சுழன்றுகொண்டிருந்த ராட்சத ராட்டினம் திடீரென அச்சு முறிந்து கீழே விழுந்ததில் 14 பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாபுவா நகரில் உள்ள அரசு பள்ளிக்கு அருகே நடைபெற்ற ‘மகராஜ் நோ மெலோ’ திருவிழாவில், கடந்த 19ஆம் தேதி மாலை மாணவர்கள் ‘டிராகன் ஸ்விங்’ எனப்படும் ராட்டினத்தில் உற்சாகமாகச் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ராட்டினத்தின் தாங்குதளம் உடைந்ததால், மாணவர்கள் அலறியடித்தபடி ராட்டினத்துடன் தரையில் மோதினர். இதில் 13 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என மொத்தம் 14 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக ஜாபுவா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பலத்த காயமடைந்த இரு மாணவிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புக் குறைபாடே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நேஹா மீனா மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.