சமூக வலைதளங்களில் பரப்பப்படும் ஆதாரமற்ற பாரம்பரிய மருத்துவக் குறிப்புகளைப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டாம் என்று மாநில ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், உடல் எடையைக் குறைப்பதற்காக சமூக வலைதளத் தகவலை நம்பி வெங்காரம் எனப்படும் ரசாயன உப்பை உட்கொண்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, போலி மருத்துவக் குறிப்புகள் மற்றும் விளம்பரங்கள் குறித்து அரசு அதிகாரிகள் தீவிர விளக்கமளித்துள்ளனர். தொலைக்காட்சிகளில் வரும் முறையற்ற ஆயுஷ் மருத்துவ விளம்பரங்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், சமூக வலைதளங்களில் இது போன்ற போலித் தகவல்களைத் தடுப்பது பெரும் சவாலாக இருப்பதாகவும் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பல விளம்பரங்களில் முகவரி இல்லாமல் வெறும் அலைபேசி எண்கள் மட்டுமே வழங்கப்படுவதால், அத்தகைய நபர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் நிலவுகிறது. இருப்பினும், இது போன்ற விளம்பரங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தப்படும் என்று ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளுக்குச் சமூக வலைதளங்களை நாடாமல், அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்களை அணுகி மருந்துகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய போலி மருத்துவ முறைகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
