அதிமுகவின் மூத்த நிர்வாகியான வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று சசிகலா வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் ‘தாய்க் கழகம்’ என நினைத்து ஒரு ‘தீய கழகத்தில்’ சேர்ந்துவிட்டதாகவும், இது ஒரு சிலரின் சுயநலத்தால் எடுத்த முடிவு என்றும் அவர் சாடியுள்ளார். எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இந்த இயக்கம் ஏழை மக்களுக்கானது. ஆனால், இன்று தங்களைத் தாங்களே தலைவர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள், கட்சியை வளர்க்காமல் அழிக்கிறார்கள் என்றும், இது நுனிக்கிளையில் அமர்ந்து அடிமரத்தை வெட்டுவதற்குச் சமம் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுகவின் ஆசைக்குத் தீனி போடும் வகையில் அதிமுகவினர் செயல்படுவது வேதனை அளிப்பதாகக் கூறியுள்ள சசிகலா, தனது இறுதி மூச்சு வரை திமுகவை எதிர்ப்பதே தனது ஒரே கொள்கை என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா காலத்தில் மாற்றுக் கட்சியினர் நம்மைத் தேடி வந்தார்கள், ஆனால் இன்று நம் எம்.எல்.ஏ-க்களே பதவி விலகிவிட்டுப் போகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்றப் புதிய வியூகங்களை வகுத்து வருவதாகவும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து களம் காண வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.
