தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணிக் கணக்குகள் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளன. ஏற்கனவே பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில், தற்போது டி.டி.வி. தினகரனின் அமமுக-வும் அக்கூட்டணியில் இணைந்துள்ளது.
இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது கட்சி நிர்வாகிகளுடன் தைலாபுரம் தோட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. எம்.எல்.ஏ. அருள், “அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு டி.டி.வி. தினகரனின் முடிவே ஒரு உதாரணம்” என்று குறிப்பிட்டார்.
மேலும், ராமதாஸ் அவர்கள் வன்னியர்களையும், தலித் மக்களையும் இரு கண்களாகவே கருதுகிறார் என்றும், விசிக தலைவர் திருமாவளவனைத் தனது சொந்தப் பிள்ளை போலவே அவர் நடத்துவதால் தங்களுக்குள் எந்தப் பகையும் இல்லை என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
