தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிப்பதற்காக, சமீபத்தில் டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூட்டணி விவகாரங்கள் குறித்து பொதுவெளியில் யாரும் பேசக்கூடாது என்று கட்சித் தலைமை அறிவுறுத்தியிருந்தது.

இந்தச் சூழலில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மேலிடப் பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் எனப் பலர் கலந்துகொண்டு தேர்தல் பணிகள் குறித்து விரிவாக விவாதித்தனர்.

இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளைத் தேர்வு செய்து, அங்கு போட்டியிடத் தகுதியான வேட்பாளர்களின் பட்டியலைத் தயார் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

வரவிருக்கும் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளிடம் இந்த 60 தொகுதிகளை முன்னிறுத்திப் பேச்சுவார்த்தை நடத்தி, தங்களுக்குத் தேவையான இடங்களைப் கேட்டுப் பெறவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் தேர்தல் பணிகளை இப்போதே தீவிரப்படுத்த அக்கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.