அதிமுகவின் தேர்தல் அறிக்கை குறித்துக் கேட்டபோது, “பழைய சுரைக்காய் கறிக்கு உதவாது” என்பது போல, “இதில் என்ன புதிதாக இருக்கிறது?” என்று கிண்டலாகக் கேட்டார் கருணாஸ். “சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும்” என பழமொழியைச் சொல்லி, அதிமுகவிடம் மக்களுக்காகச் சொல்ல எதுவும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். அதே சமயம், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களைப் புகழ்ந்து தள்ளவும் அவர் தவறவில்லை.
இந்தியாவிலேயே மத்திய அரசின் நிதிக்காகக் காத்திருக்காமல், மாநில அரசின் வருமானத்திலேயே மகத்தான திட்டங்களைச் செயல்படுத்தும் ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்று பெருமிதம் கொண்டார். விரைவில் வெளியாகப்போகும் முதலமைச்சரின் தேர்தல் அறிக்கை ஒட்டுமொத்த இந்தியாவையே உற்றுநோக்க வைக்கும் வகையில் அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
