தேமுதிகவின் வாக்கு வங்கி ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்தாலும், விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நிலவும் அனுதாப அலையை முன்னிறுத்தி பிரேமலதா விஜயகாந்த் தனது அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் கடலூரில் நடந்த மாநாட்டின் வெற்றியைத் தொடர்ந்து, திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய மூன்று கட்சிகளுடனும் அவர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் கேட்கும் தொகுதிகளும் அமைச்சரவையில் இடமும் தருவதாகக் கூறப்பட்டாலும், வெற்றி வாய்ப்புள்ள கூட்டணியில் சேர வேண்டும் என்பதில் பிரேமலதா உறுதியாக இருந்தார்.
திமுக மற்றும் அதிமுகவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் தொகுதிகள் மற்றும் தேர்தல் செலவுகள் தொடர்பாக சில இழுபறிகள் நீடித்தன. குறிப்பாக, 21 தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா சீட் வேண்டும் என்ற தேமுதிகவின் கோரிக்கையை ஏற்பதில் சிக்கல் நிலவியது.
இந்நிலையில், “இனிமேலும் தாமதிக்க முடியாது, விரைவில் முடிவெடுங்கள்” என்று அதிமுக தரப்பில் இருந்து கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டது.
இரண்டு நாள் கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போதைய அரசியல் சூழலை ஆராய்ந்த பிரேமலதா, இறுதியில் அதிமுகவுடனேயே கூட்டணி அமைப்பது என தனது இறுதி முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
