உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டம் குர்ஜா பகுதியில், சாலையில் சுற்றித்திரிந்த காளைகள் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களைத் துரத்தித் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜாதியா பாலிடெக்னிக் கல்லூரி மைதானம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற இந்தத் தாக்குதலில், நிலைதடுமாறி கீழே விழுந்த இளைஞர் ஒருவரை ஒரு காளை தனது கால்களால் மிதித்துத் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார்.

 

இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், காளைகளின் அட்டகாசத்தைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கே இதற்குக் காரணம் எனச் சாடியுள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நகரில் சுற்றித்திரியும் கால்நடைகளை உடனடியாகப் பிடித்து கோசாலைகளுக்கு அனுப்பத் தனிப்படை அமைக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.