ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் சங்கராந்தி பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது மது அருந்திய இரண்டு மென்பொருள் பொறியாளர்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேவி பல்லி மண்டலத்திற்குட்பட்ட பண்டவட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த மணிகுமார் மற்றும் புஷ்பராஜ் ஆகிய இருவரும் முறையே சென்னை மற்றும் பெங்களூருவில் மென்பொருள் பொறியாளர்களாகப் பணியாற்றி வந்தனர்.

பண்டிகையை முன்னிட்டு ஊருக்குத் திரும்பிய இவர்கள் கடந்த சனிக்கிழமை மாலை தனது உறவினர்கள் நான்கு பேருடன் இணைந்து அப்பகுதியில் உள்ள குன்று ஒன்றின் மீது மது அருந்தியுள்ளனர். அப்போது திடீரென மணிகுமார் மற்றும் புஷ்பராஜிற்கு கடுமையான தலைவலி மற்றும் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் வழியிலேயே மணிகுமார் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புஷ்பராஜ் உயிரிழந்தார். இவர்களுடன் மது அருந்திய மற்ற நான்கு பேர் நலமுடன் உள்ள நிலையில் இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அவர்கள் அருந்திய மதுவில் விஷம் கலக்கப்பட்டதா அல்லது அதிகப்படியான மது நுகர்வால் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.