ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் (BBL) கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில், பிரிஸ்பேன் ஹீட் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சிட்னி சிக்ஸர்ஸ் அணி, குவாலிபயர் சுற்றுக்குத் தகுதி பெற்று அசத்தியுள்ளது.
பிரிஸ்பேனில் உள்ள புகழ்பெற்ற காபா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற சிட்னி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நாதன் மெக்ஸ்வினி 69* ரன்களும், மைக்கேல் நீசர் அதிரடியாக 14 பந்துகளில் 35 ரன்களும் எடுத்தனர். சிட்னி தரப்பில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளைச் சாய்த்து அசத்தினார்.
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி அணி களமிறங்கியது. கடந்த போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன் எடுக்க மறுத்ததால் அதிருப்தியில் இருந்த பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம், இந்தப் போட்டியிலும் தனது திணறலான ஆட்டத்தைத் தொடர்ந்தார். கடந்த ஆட்டத்தில் ஸ்மித் 12-வது ஓவரில் (Power Surge) 32 ரன்கள் விளாசி தனது முடிவைச் சரி என நிரூபித்த போதிலும், பாபர் அசாம் தன் மீதான நம்பிக்கையின்மையாக அதைக் கருதி கடும் கோபத்தில் இருந்தார்.
இந்நிலையில், இந்தப் போட்டியிலும் அந்தப் பாதிப்பு அவரிடம் தெரிந்தது. வெறும் 7 பந்துகளை எதிர்கொண்ட பாபர் அசாம், ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். “மைதானத்தில் கோபத்தைக் காட்டுவதை விட, பேட்டிங்கில் ரன்களைக் குவிப்பதே ஒரு வீரருக்கு அழகு” எனச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
பாபர் ஏமாற்றம் அளித்தாலும், தொடக்க வீரர் ஸ்டீவ் ஸ்மித் 54 (40) ரன்கள் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். மிடில் ஆர்டரில் கேப்டன் ஹென்றிக்ஸ் 24 ரன்கள் எடுக்க, இறுதி நேரத்தில் இங்கிலாந்து வீரர் சாம் கரண் 27 பந்துகளில் 53* ரன்கள் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
சிட்னி சிக்ஸர்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சிட்னி அணி தொடரின் அடுத்த கட்டமான குவாலிபயர் சுற்றுக்குள் நுழைந்தது. தோல்வியடைந்த பிரிஸ்பேன் ஹீட் அணி தொடரிலிருந்து வெளியேறியது.
