ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் (BBL) டி20 தொடரில், பாகிஸ்தான் நட்சத்திர வீரர்கள் தொடர்ச்சியாக அவமதிக்கப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

பிபிஎல் தொடரின் 15-ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தானின் முன்னணி வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உள்ளிட்டோர் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில போட்டிகளில் இவர்களுக்கு இழைக்கப்படும் அணுகுமுறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடி வரும் முகமது ரிஸ்வான், ஒரு போட்டியில் 23 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தபோது, அதிரடியாக விளையாடவில்லை என்ற காரணத்திற்காக ‘ரிடையர்ட் ஹர்ட்’ (Retired Hurt) முறையில் வலுக்கட்டாயமாக மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதேபோன்று சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடும் பாபர் அசாம், ஒரு ரன் எடுக்கும் வாய்ப்பு இருந்தும் சக வீரர் ஸ்டீவ் ஸ்மித்தால் தடுக்கப்பட்டார். தன்னை விட பாபர் மெதுவாக விளையாடுகிறார் என்ற எண்ணத்தில் ஸ்மித் இவ்வாறு செய்ததாகக் கருதப்படுகிறது.

ஸ்மித்தின் செயலால் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்த பாபர் அசாம், அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அப்போது எல்லைக் கோட்டில் இருந்த கயிறுகளைத் தனது பேட்டினால் பலமாகத் தாக்கி தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இதேபோல் காயமின்றி இருந்தும் ரிஸ்வான் வெளியேற்றப்பட்டது அவர் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையின்மையைக் காட்டுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தச் சம்பவங்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. “டி20 கிரிக்கெட்டில் ஸ்ட்ரைக் ரேட் முக்கியம்; அதிரடியாக விளையாடாத வீரர்களை அணியின் நலன் கருதி வெளியேற்றுவதில் தவறில்லை” என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் வாதாடுகின்றனர்.

ஆனால், பாகிஸ்தான் ரசிகர்களோ, “உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர வீரர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் கிளப் நிர்வாகங்கள் திட்டமிட்டு அவமானப்படுத்துகின்றன. பாகிஸ்தான் வீரர்களை ஒரு பொருட்டாகவே அவர்கள் மதிக்கவில்லை” என்று ஆவேசமாகப் பதிவிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே ஷாஹீன் அப்ரிடி காயம் காரணமாகவும், ஷதாப் கான் இலங்கை தொடருக்காகவும் வெளியேறியுள்ள நிலையில், தற்போது விளையாடி வரும் முன்னணி வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சூழல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.