சீனாவின் ஷாங்காய் நகரில் உயிரிழந்த தனது கணவரின் தனிப்பட்ட உடைமைகளை ஆய்வு செய்த மனைவிக்கு அவர் கடந்த 7 ஆண்டுகளாக வேறொரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1999ம் ஆண்டு திருமணமான ஜின் என்பவர் கடந்த 2022ம் ஆண்டு உயிரிழந்தார்.
அவரது மறைவிற்குப் பிறகு நிதி ஆவணங்களைச் சரிபார்த்தபோது அவர் தனது காதலிக்கு சுமார் 20 மில்லியன் யுவான் தொகையை ரகசியமாகப் பரிமாற்றம் செய்திருப்பது அம்பலமானது. இந்தத் தொகையானது தங்களின் குடும்பச் சொத்து என்றும் தனது அனுமதி இன்றி கணவர் இதனை வழங்கியுள்ளார் என்றும் கூறி அந்தப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கணவர் தனது மனைவியின் அனுமதியின்றி குடும்பச் சொத்தை மற்றொரு பெண்ணிற்குப் பரிமாற்றம் செய்தது சட்டப்படி செல்லாது என்று தீர்ப்பளித்தது. அந்தப் பெண் ஏற்கனவே ஒரு பகுதியைத் திருப்பி அளித்திருந்த நிலையில் மீதமுள்ள பதினான்கு மில்லியன் யுவான் தொகையை ஜின்னின் மனைவியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை ஷாங்காய் இடைநிலை மக்கள் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் கணவரின் இந்த நடவடிக்கை பொது ஒழுக்கத்திற்கும் சமூக அறத்திற்கும் எதிரானது என்று குறிப்பிட்டது. இந்தத் தீர்ப்பு மனைவியின் சட்டப்பூர்வமான நிதி உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்துள்ளது.
