“எஸ்சி – எஸ்டி பெண்கள் அழகாக இல்லாவிட்டாலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்” என மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ. பூல் சிங் பரையா பேசியுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.எல்.ஏ.வுமான பூல் சிங் பரையா, சமீபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பாலியல் குற்றங்கள் குறித்து ஜாதியை மையப்படுத்திப் பேசினார். அவரது கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகின்றன.
பாலியல் வல்லுறவு சம்பவங்கள் குறித்து பூல் சிங் பரையா பேசியதாவது:
“பொதுவாக ஒரு அழகான பெண்ணைப் பார்க்கும்போது, ஆண்களின் மனம் திசை திரும்பி இத்தகைய குற்றங்கள் நிகழ்கின்றன. இதுவே பாலியல் வன்கொடுமைக்கான பொதுவான வரையறையாக உள்ளது. ஆனால் இந்தியாவில் பட்டியலின (SC), பழங்குடியின (ST) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் அழகாக இல்லாவிட்டாலும் அதிக அளவில் வல்லுறவுக்கு ஆளாகின்றனர்.”
இந்தக் குற்றங்களுக்குப் பின்னால் இருக்கும் காரணம் குறித்து அவர் மேலும் கூறுகையில், “பழங்கால நூல்களில் குறிப்பிட்ட ஜாதி பெண்களை வன்கொடுமை செய்வது புனித யாத்திரை செல்வதற்குச் சமமான பலனைத் தரும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆன்மீகப் பலனுக்காகவும், புண்ணியம் கிடைக்கும் என்ற தவறான நம்பிக்கையாலுமே இத்தகைய பிறழ் மனநிலை கொண்டவர்கள் குழந்தைகளைக் கூட விட்டுவைப்பதில்லை. இது தனிநபரால் அல்லாமல், ஒரு குழுவாக நிகழ்த்தப்படும் வக்கிரமான குற்றமாகும்,” என்று அவர் தெரிவித்தார்.
பெண்களின் தோற்றம் குறித்தும், ஜாதிய ரீதியாகவும் பூல் சிங் பரையா பேசியுள்ள விதம் அருவருக்கத்தக்கது எனப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, வன்கொடுமைகளுக்குப் பெண்களின் அழகே காரணம் என்பது போன்ற அவரது கருத்துக்கள் பெண்ணியலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்க வேண்டிய மக்கள் பிரதிநிதியே, இத்தகைய பிற்போக்குத்தனமான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தது காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
