பீகார் மாநிலம் மோதிஹாரி மாவட்டத்தில் உள்ள கைத்தோலியா கிராமத்தில் கட்டப்பட்டு வரும் ‘விராட் ராமாயணக் கோயில்’ வளாகத்தில், உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் சனிக்கிழமை முறைப்படி நிறுவப்பட்டது.
தமிழகத்தின் மகாபலிபுரத்தில் இருந்து சுமார் 2,500 கிலோமீட்டர் தூரம், 40 நாட்களுக்கும் மேலாகப் பயணம் செய்து இந்த பிரம்மாண்ட சிவலிங்கம் பீகாரைச் சென்றடைந்தது. உயர்தர கிரானைட் கல்லால் செதுக்கப்பட்ட இந்த சிவலிங்கத்தை உருவாக்க 10 ஆண்டுகள் ஆனது. இதில் 1,008 சிறிய சிவலிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 1,008 கைவினைஞர்கள் தங்களது கடின உழைப்பின் மூலம் இதனை உருவாக்கியுள்ளனர்.
இந்த சிவலிங்கத்தின் சிறப்பம்சங்கள் வருமாறு: எடை: 200 மெட்ரிக் டன் (2 லட்சம் கிலோ). நீளம்: 33 அடி. மொத்த உயரம்: 30 அடி உயரக் கோபுரத்தின் மீது நிறுவப்பட்டுள்ளதால், தரையில் இருந்து இதன் மொத்த உயரம் 60 அடிக்கும் மேல் இருக்கும்.இரண்டு ராட்சத கிரேன்கள் உதவியுடன் சுமார் அரை மணி நேரத்தில் பொறியாளர்கள் குழுவினர் இதனை வெற்றிகரமாக நிறுவினர்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், மஹாவீர் அறக்கட்டளையின் முன்னாள் செயலாளருமான மறைந்த ஆச்சார்யா குணால் கிஷோரின் கனவுத் திட்டமே இந்த விராட் ராமாயணக் கோயில். 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில் வளாகத்தில், அவரது மகன் சயான் குணால் தற்போது சடங்கு சம்பிரதாயங்களுடன் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்துள்ளார். அயோத்திக்கு அடுத்தபடியாக இது மிக முக்கிய ஆன்மீகத் தலமாக மாறும் என்றும், இதன் மூலம் உள்ளூர் பகுதியில் விமான நிலையம், நெடுஞ்சாலைகள் போன்ற கட்டமைப்பு வசதிகள் மேம்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
2 लाख किलो वजनी, 33 फीट लंबा… मोतिहारी में विश्व के सबसे विशाल शिवलिंग को देख हो जाएंगे हैरान
पूरी खबर: https://t.co/WdJiQtFXlN#Bihar pic.twitter.com/pBCtJbOPh3
— NDTV India (@ndtvindia) January 17, 2026
சிவலிங்கம் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அப்பகுதிக்கு நேரில் சென்று கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். தலைமைச் செயலாளர் பிரத்யய அம்ரித் மற்றும் டிஜிபி வினய் குமார் ஆகியோர் உடனிருந்தனர். “இந்த பிரம்மாண்டத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் சனாதனக் கனவை நனவாக்குவதுடன், ராமாயணச் சுற்றுலாவிற்குப் பெரிய பலத்தைச் சேர்க்கும்” என்று துணை முதலமைச்சர் விஜய் சின்ஹா பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் கோயில் வளாகத்தில் சிவலிங்கம் நிறுவப்பட்டதைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அப்பகுதியில் திரண்டதால் அந்த இடமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
