மத்தியப் பிரதேச மாநிலத்தில் மனிதாபிமானமற்ற ஒரு செயல் அரங்கேறியுள்ளது. தங்கள் வீட்டு சிறுமியுடன் காதலில் இருந்ததாகக் கூறி, ஒரு சிறுவனை அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் நிர்வாணமாக்கி நடுரோட்டில் இழுத்துச் சென்றுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, அந்தச் சிறுவனும் சிறுமியும் காதலித்து வந்த நிலையில், சிறுமி சிறார் இல்லத்திலும், சிறுவன் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தனர்.

சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்த சிறுவன், தனது தாயுடன் வசித்து வந்தான். இந்நிலையில், ஆத்திரம் குறையாத சிறுமியின் குடும்பத்தினர், அந்தச் சிறுவனை வழிமறித்துத் தாக்கியதோடு, அவன் அணிந்திருந்த உடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி வீதியில் அலைய விட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.