சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள படமாத்தூர் தனியார் சர்க்கரை ஆலையில், விஷவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஆலையில் இயந்திரங்களைச் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.
அப்போது, மொலாசஸ் (கரும்புச் சாறு கழிவு) சேமித்து வைக்கும் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக கரும்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த மோகனசுந்தரம் (35) என்பவர் முதலில் உள்ளே இறங்கியுள்ளார். எதிர்பாராதவிதமாக அங்கு கசிந்த விஷவாயு தாக்கி அவர் மயங்கி விழுந்த நிலையில், அவரைக் காப்பாற்ற உள்ளே இறங்கிய சிவகங்கையைச் சேர்ந்த பொன்னழகு (58) என்பவரும் விஷவாயு தாக்கி அதே இடத்தில் மயங்கினார்.
நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த சக ஊழியர்கள், அவர்களை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் உறவினர்கள் ஆலை நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர். பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி இத்தகைய அபாயகரமான பணிகளில் தொழிலாளர்களை ஈடுபடுத்தியதே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
