மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் ஆடையின்றி பெண் ஒருவர் சாலையில் ஓடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்தப் பெண் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி தனது மகனின் நண்பரான சோட்டு என்ற 28 வயது இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த அந்த இளைஞர், வியாழக்கிழமை அன்று ஒரு வயல்வெளியில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பொய் வழக்கில் சிக்க வைத்ததால் ஏற்பட்ட அவமானம் காரணமாகவே அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில் தற்போது வெளியாகியுள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளில், சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணும் தற்கொலை செய்துகொண்ட இளைஞரும் ஒரே வீட்டிலிருந்து ஆடையின்றி பதற்றத்துடன் வெளியே ஓடி வருவது பதிவாகியுள்ளது. அந்தப் பெண் ஒரு திசையிலும் அந்த இளைஞர் மறுதிசையிலும் ஓடுவதைக் காண முடிகிறது.

பாலியல் வன்கொடுமை புகார் அளித்த பெண்ணின் உண்மைத்தன்மை குறித்து இந்த வீடியோக்கள் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளன. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அந்த வீடியோக்களின் உண்மைத்தன்மை குறித்தும் அந்த இளைஞரின் தற்கொலைக்கு இந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் காரணமா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.