உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், சமூக வலைதளங்களில் ஆபாசமான மற்றும் இரட்டை அர்த்தம் கொண்ட வீடியோக்களைப் பதிவிட்டு வந்த பெண் இன்ஃப்ளூயன்சர் ஒருவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆயுர்வேத மருந்து விநியோகஸ்தராகப் பணிபுரியும் ஒரு பெண், அழகு நிலையம் ஒன்றிற்குச் சென்றபோது அங்குள்ள ஊழியர் ஒரு வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்துள்ளார்.

அந்த வீடியோவில் ஆக்ராவைச் சேர்ந்த ஒரு பெண் மிகவும் அபாசமான மொழியில் பேசி வீடியோ வெளியிடுவதும், அவருக்கு சுமார் 2.95 லட்சம் பின்தொடர்பவர்கள் இருப்பதும் தெரியவந்தது. சில நாட்களுக்குப் பிறகு அந்தப் புகார்தாரரின் குழந்தைகளும் அதே வீடியோவை இன்ஸ்டாகிராமில் பார்த்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குழந்தைகளின் மனநிலையைச் சீரழிக்கும் என்று கூறி சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் ஆக்ரா காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சமூக வலைதளங்களில் தங்களைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இதுபோன்ற தரம் தாழ்ந்த உள்ளடக்கங்களைப் பதிவிடுவது அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.

இது போன்ற தேவையற்ற மற்றும் ஆபாசமான வீடியோக்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, அவர்களது அலைபேசிகளில் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை துணை ஆணையர் சையத் அலி அப்பாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், யூடியூப் போன்ற செயலிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பயன்முறையைச் செயல்படுத்துவதன் மூலம் தேவையற்ற வீடியோக்கள் வருவதைத் தவிர்க்கலாம் என்றும், பெற்றோர்கள் குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேசி எது சரி, எது தவறு என்பதை விளக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.