உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாயமான வாலிபர் ஒருவரின் மரணத்தில், தற்போது வெளியாகியுள்ள டிஎன்ஏ பரிசோதனை அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி, அபிஷேக் யாதவ் என்ற வாலிபரை மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அதன் பிறகு அவர் வீடு திரும்பாத நிலையில், ஒரு கடையின் அருகே எரிந்த நிலையில் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்தச் சமயத்தில், அது ஏதோ விலங்கின் சடலம் என்று கூறி காவல்துறையினர் அலட்சியமாகத் தூக்கி வீசியுள்ளனர். ஆனால், தனது மகனைத் திட்டமிட்டு எரித்துக் கொன்றுவிட்டதாகக் கூறி அபிஷேக்கின் பெற்றோர் ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து நீதி கேட்டுப் போராடி வந்தனர்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தற்போது வந்துள்ள டிஎன்ஏ அறிக்கை, எரிந்த நிலையில் மீட்கப்பட்டது அபிஷேக் யாதவ்வின் உடல் தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. காவல்துறையினர் ஆரம்பத்தில் வழக்கைப் பதிவு செய்யாமல் மெத்தனம் காட்டியதும், குற்றவாளிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு உண்மையை மறைக்க முயன்றதும் தற்போது அம்பலமாகியுள்ளது.
டிஎன்ஏ அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, நயீம் மற்றும் ராஜு ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐந்து ஆண்டுகளாக மகனின் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடிய பெற்றோர், அலட்சியமாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க வலியுறுத்தி வருகின்றனர்.
