உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மாக் மேளா திருவிழாவில், ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான தங்க ஆபரணங்களை அணிந்து வலம் வரும் கூகுள் கோல்டன் பாபா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். கடந்த இருபது ஆண்டுகளாகத் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை விரும்பி அணிந்து வரும் இவர், தற்போது நடைபெறும் மேளாவில் ஐந்து கிலோ தங்கம் மற்றும் நூறு கிலோ வெள்ளிப் பொருட்களைப் பயன்படுத்தி வருகிறார்.

இவரது உடலில் எப்போதும் மின்னும் தடிமனான தங்கச் சங்கிலிகள் மற்றும் கைகளில் ஏந்தியிருக்கும் தங்கத்திலான கிருஷ்ணர் சிலை ஆகியவை திருவிழாவிற்கு வரும் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. வெள்ளிப் பாத்திரங்களில் மட்டுமே உணவு உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள கோல்டன் பாபா, தங்கம் அணிவது தனது முன்னோர்களின் பாரம்பரியம் மற்றும் கௌரவத்தின் அடையாளம் என்று கூறுகிறார்.

 

தங்கம் என்பது வீரம் மற்றும் செழிப்பின் சின்னம் என்பதால் அதனைத் தான் விரும்பி அணிவதாகவும், திருடர்கள் குறித்த அச்சம் தனக்கு இல்லை என்றும் அவர் தெரிவிக்கிறார். மாக் மேளாவில் அவரது முகாமிற்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோல்டன் பாபாவுடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது சமூக வலைதளங்களிலும் இவரது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.