கோவை மாவட்டம் காரமடை அருகே புதிய காருக்குத் திருஷ்டி கழித்த விவகாரத்தில், பக்கத்து வீட்டாருக்கிடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தாங்கள் புதிதாக வாங்கிய காருக்கு எலுமிச்சை பழத்தைச் சுற்றி திருஷ்டி கழித்துள்ளனர்.

அவ்வாறு பயன்படுத்தப்பட்ட எலுமிச்சை பழத்தை அவர்கள் பக்கத்து வீட்டின் அருகே வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அண்டை வீட்டார் இது குறித்துக் கேள்வி எழுப்பவே, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி, இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் அளவிற்கு கைகலப்பாக மாறியது. பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சண்டைக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

திருஷ்டி கழிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு எலுமிச்சை பழம், அண்டை வீட்டாருக்கிடையே இவ்வளவு பெரிய வன்முறை மோதலாக உருவெடுத்தது அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது. தற்போது இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.