காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பது ஒன்றும் புதிய விஷயமல்ல என்றும், இது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ள இயல்பான மற்றும் எதார்த்தமான ஒரு எதிர்பார்ப்புதான் என்றும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் தங்கள் பிரதிநிதிகள் வெற்றி பெற்று கணிசமான இடங்களைப் பிடிக்கும்போது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை உரிமை மற்றும் நோக்கம் என்று விளக்கம் அளித்தார்.

மேலும், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், மாநிலத் தேர்தல்கள் மூலம் மக்கள் அவ்வப்போது மத்திய அரசுக்குத் தகுந்த பாடம் புகட்ட வாய்ப்பு கிடைப்பதாகக் குறிப்பிட்டார். திரைப்படங்கள் தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் என்று அவர் கருத்தை கூறியுள்ளார்.

இதனால் பொழுதுபோக்கிற்காக மக்கள் படம் பார்ப்பார்களே தவிர, நிஜ வாழ்க்கையில் மக்கள் சந்திக்க வேண்டிய பிரச்சினைகள் இன்னும் ஏராளமாக உள்ளன என்று கூறினார். தமிழக அரசியலில் நிலவும் பல்வேறு சூழல்கள் குறித்து அவர் தனது கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.