உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நேகா சர்மா என்ற பெண் தனது கள்ளக்காதலன் ஆயுஷ் என்பவருடன் சேர்ந்து, சொந்தக் கணவரான பிரதீக் சர்மாவை மதுவில் விஷம் கொடுத்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம், சுற்றுலா செல்வதாகக் கூறி கணவரை லக்னோவிற்கு அழைத்துச் சென்ற நேகா, அங்கு ஒரு ஹோட்டலில் வைத்து தனது காதலனுடன் இணைந்து இந்தச் சதித்திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளார். கணவர் இறந்த பிறகு, அவர் காணாமல் போய்விட்டதாக நாடகமாடிய நேகா, பின்னர் குழந்தைகளுடன் தலைமறைவானார். ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில் இந்தத் திட்டமிட்ட கொலை அம்பலமானது.

​இந்தக் கொடூரக் கொலையில் மிக முக்கியமான சாட்சியாக மாறியது பிரதீக்கின் 5 வயது மகள் மான்யா தான். நீதிமன்றத்தில் அந்தச் சிறுமி அளித்த வாக்குமூலம் அனைவரையும் அதிர வைத்தது. “ஹோட்டலில் தங்கியிருந்தபோது, ஆயுஷ் அங்கிள் ஒரு வெள்ளை பவுடரை கிளாஸில் கலந்ததையும், அதை அம்மா அப்பாவுக்குக் குடிக்கக் கொடுத்ததையும் நான் போர்வையினுள் மறைந்திருந்து பார்த்தேன்” என்று அந்தச் சிறுமி தைரியமாகத் தெரிவித்துள்ளார். இந்தச் சிறுமியின் சாட்சியம் மற்றும் இதர ஆதாரங்களின் அடிப்படையில், நேகா சர்மா மற்றும் ஆயுஷ் ஆகிய இருவரையும் நீதிமன்றம் குற்றவாளிகள் என அறிவித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் ஜனவரி 16-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.