டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ திரைப்படக் குழுவினர் கலந்துகொண்டது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 1960-களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவான இப்படம், அப்போதைய காங்கிரஸ் அரசைத் தவறாகச் சித்தரிப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறிப்பாக, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் போன்றோர் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டாம் எனப் பரப்புரை செய்து வரும் நிலையில், படக்குழுவினர் பாஜக அமைச்சரின் இல்ல விழாவில் பிரதமருடன் பங்கேற்றது அக்கூட்டணிக்குள் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இந்தச் சூழலில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையே சமூக வலைதளங்களில் காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மேலும் படத்தின் உள்ளடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸின் நிலைப்பாட்டை பாஜக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதாக திமுக முன்னாள் எம்.பி செந்தில்குமார் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸின் தேவையற்ற எதிர்ப்பே பாஜகவிற்குத் தேவையான கன்டென்டைத் தேடிக்கொடுத்துவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் அதேவேளையில், ‘பராசக்தி’ ஒரு பரப்புரை படம் அல்ல என்றும், மக்கள் இதனைச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றும் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும், கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான இந்த மோதல் வரும் சட்டமன்றத் தேர்தல் களத்தில் ஒரு புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
