அடுத்த மூன்று ஆண்டுகளில் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவத் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும், மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்குச் சென்று படிப்பது அர்த்தமற்றது என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஒரு சிறந்த மருத்துவராக உருவாவதற்கு நீண்ட காலம் எடுக்கும் நிலையில், மருத்துவ அறிவு தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால் அதை மனிதர்களால் கையாள்வது கடினம் என்பது அவரது கருத்து.
வரும் ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மற்றும் ரோபோக்களின் அசுர வளர்ச்சியால், மனித மருத்துவர்களை விட ரோபோக்கள் மிகச்சிறந்த மற்றும் துல்லியமான மருத்துவ சேவையை மக்களுக்கு வழங்கும் என அவர் கணித்துள்ளார்.
குறிப்பாக, மஸ்க்கின் ‘ஆப்டிமஸ்’ ரோபோக்கள் உலகில் உள்ள சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களை விடச் சிறப்பாகச் செயல்படும் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த மாற்றம் ஒப்பிட முடியாத அளவில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மஸ்க்கின் இந்த அதிரடி கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மருத்துவச் சேவையை அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கச் செய்யும் என ஒரு தரப்பினர் வரவேற்றாலும், மருத்துவம் படிக்க வேண்டும் என்ற மில்லியன் கணக்கான மாணவர்களின் கனவு மற்றும் வேலைவாய்ப்பு என்னவாகும் என்ற அச்சமும் ஒருபுறம் எழுந்துள்ளது.
